சைபர்ஜெயா, மார்ச் 10 - செல்வந்தர்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் வேளையில், சாதாரண குடிமக்கள் நிதிச் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நாட்டின் வரி முறையை ஒரு சார்புடையதாக இருக்கக் கூடாது.
நாட்டின் வரி வசூலிப்பின் பெரும்பகுதியில் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்களும் மற்றும் பெரிய நிறுவனங்களும் 15 விழுக்காடு மட்டுமே ஏற்றுக் கொள்வதாகவும், இதர 85 விழுக்காட்டினர் வரி விலக்கு பெறுவதாகவும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு வரி வசூல் முக்கிய ஆதாரமாக இருந்தாலும், அதிக வருமானம் கொண்ட தரப்பினரிடமிருந்து மிகவும் நியாயமான முறையில் வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்கும் ஒரு சில அரசியல்வாதிகளின் அணுகுமுறையையும் பிரதமர் விமர்சித்தார்.
சைபர்ஜெயாவில் நடைபெற்ற 29-வது வரி தினத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போது, அன்வார் அவ்வாறு கூறினார்.
நாட்டில் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவ வரி வசூலிப்பு தேவைப்படும் நிலையில், இந்த வசூலிப்பு அமைப்பு ஒரு சில செல்வந்தர்களுக்குச் சாதகமாக அமைய அரசாங்கம் அனுமதிக்காது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
குடும்பம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் பி40 மற்றும் எம்40 பிரிவினருக்குப் பல வரி விலக்குகளை வழங்கும் ஆசியான் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, நாட்டின் வரி வசூலிப்பை முறையாகவும் சீராகவும் நிர்வகித்து வரும் உள்நாட்டு வருமான வரி வாரியம், LHDN-இன் செயல்திறனில் தாம் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் குறிப்பாக, 2024-இல், e-invois போன்ற செயல் முறைகளின் புதிய பயன்பாடுகள் உட்பட சீரமைக்கப்பட்ட வியூக செயல்திறன்களின் வழி இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


