கோலாலம்பூர், மார்ச் 10 - புக்கிட் பிந்தாங் வட்டரத்திலுள்ள ஐந்து இடங்களில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட சோதனைகளில் விலை மாதர்கள் என சந்தேகிக்கப்படும் 18 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
நள்ளிரவு 12.45 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2 மணி வரை நடந்த 'கேஎல் ஸ்ட்ரைக் போர்ஸ்' எனும் இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்களில் உகாண்டா, வியட்நாம் தாய்லாந்து, டான்சானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு பேரும், இந்தோனேசியா, நைஜீரியா மற்றும் கென்யாவைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.
அந்தப் பகுதியில் நேர விலைமாதர்களாக செயல்பட்டு வந்ததையும் ஜாலான் சாங்காட் புக்கிட் பிந்தாங் வட்டாரத்திலுள்ள வாடிக்கையாளர்களை குறிவைத்து 100 வெள்ளி வரை வசூலித்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டார் என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் 35 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற இந்த நடவடிக்கையில் ஏழு வெளிநாட்டினர், மூன்று வங்காளதேசத்தினர் மற்றும் எகிப்து, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் நேப்பாளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ருஸ்டி கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 372 மற்றும் 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6 (1) (c) பிரிவின் கீழ் மேல் விசாரணைக்காக டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.


