செம்புர்ணா, மார்ச் 10 - இங்குள்ள மாபுல் தீவில் நேற்று முக்குளிப்பில் ஈடுபட்டிருந்த 34 வயது சீன சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தமது துறைக்கு நேற்று பிற்பகல் 2.36 மணிக்கு தகவல் கிடைத்ததாக செம்புர்ணா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது சப்ரி ஜைனோல் கூறினார்.
முக்குளிப்பு பயிற்றுநரான புகார்தாரர் மற்றொரு முக்குளிப்பு பயிற்றுநருடன் சேர்ந்த ஐந்து முக்குளிப்பாளர்களை மாபுல் தீவில் 12 மீட்டர் ஆழத்திற்கு முக்குளிப்பு பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சி நடவடிக்கை மதியம் 12.30 மணியளவில் நிறைவடைந்தது. பாதிக்கப்பட்டவர் உட்பட அனைத்து முக்குளிப்பாளர்களும் படகில் ஏறி தங்கள் உபகரணங்களை ஒப்படைத்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இருப்பினும், உபகரணங்களை ஒப்படைத்த பிறகும் பாதிக்கப்பட்ட நபர் படகைச் சுற்றி நீந்திக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
அனைத்து முக்குளிப்பாளர்களும் படகில் ஏறியபோது, பாதிக்கப்பட்டவரை மட்டும் காணவில்லை என்பதை புகார்தாரர் கண்டறிந்தார்.
அந்தப் பகுதியைச் சுற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டபோது அந்நபர் மயக்க நிலையில் நீரின் மேற்பரப்பில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
சக முக்குளிப்பாளர்கள் பாதிக்கப்பட்டவரை உடனடியாக செம்புர்ணா மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவர் இறந்துவிட்டதை
மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.


