கோலாலம்பூர், மார்ச் 10 - நேற்று மாலை 4.39 மணியளவில் இங்குள்ள கெரேத்தாப்பி தானா மிலாயு பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) அங்கசாபுரி நிலையத்திற்கு அருகிலுள்ள சுங்கை பந்தாய் ஆற்றில் வெளிநாட்டு ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாடவரின் உடலை மீட்பதற்கு காவல்துறையினரின் உதவியைக் கோரி அவசர தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.
அந்த அழைப்பைத் தொடர்ந்து பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 19 உறுப்பினர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தை அடைந்ததும் ஆற்றில் ஆடவர் ஒருவரின் உடல் மிதப்பதை மீட்புக் குழுவினர் கண்டனர்.
மாலை 5.31 மணியளவில் அவ்வாடவரின் உடல் கே.டி.எம்.பி. அங்கசாபுரி நிலையம் அருகே மீட்கப்பட்டு பி.பி.ஆர். ஸ்ரீ பந்தாய் அருகே பணியாளர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்டது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் உள்நாட்டவர் அல்ல என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாலை 6.49 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிவடைந்த பின்னர் அவரது உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.


