கோத்தா பாரு, மார்ச் 10 - வேப் எனப்படும் மின்சிகிரெட் வடிவிலான
மிட்டாய்கள் உள்பட மாணவர்களின் உடலாரோக்கியத்திற்கு கேடு
விளைவிக்கும் அனைத்து விதமான உணவுப் பொருள்களையும்
பள்ளிகளில் விற்பனை செய்ய கல்வியமைச்சு தடை விதித்துள்ளது.
மாணவர்களின் உடல் நலத்திற்கு தீங்கிழைக்கும் எந்தவொரு உணவுப்
பொருளையும் விற்பனை செய்யும் தரப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் எச்சரித்தார்.
ஆபத்தான உணவுப் பொருள்கள் பள்ளி வளாகங்களில் விற்கப்படாது என
கல்வியமைச்சு உறுதியளிக்கிறது. எனினும் பள்ளிக்கு வெளியே இத்தகைய
உணவுப் பொருள்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் ஊராட்சி
மன்றங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பு எங்களுக்குத்
தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
கல்வியமைச்சின் கிளந்தான் மாநில நிலையிலான 2025 ரமலான்
விற்பனை நிகழ்வில் வேப் எனப்படும் மின் சிகிரெட்டுகள் மற்றும்
சிகிரெட்டுகள் வடிவிலான மிட்டாய்கள் விற்கப்பட்டது தொடர்பில்
அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.
உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களை
மாணவர்கள் பள்ளி வளாகத்திலும் பள்ளிக்கு வெளியிலும் வாங்குவதைத்
தடுப்பதில் கல்வியமைச்சு உறுதியாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.
வேப் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஊசி
வடிவிலான மிட்டாய்கள் உள்நாட்டு சந்தைகளில் பரவலாக
விற்கப்படுவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நேற்று கூறியிருந்தது.
இத்தகைய பொருள்களின் விற்பனை சிறார்கள் மத்தியில் புகைப்பழக்கம்
மீதான ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கும் என்றும் அச்சங்கம்
எச்சரித்திருந்தது.
அந்த மிட்டாய்கள் நிஜ வேப் அல்லது ஊசிகள் போன்று காட்சியளிக்கின்றன. சிறார்களை ஈர்ப்பதற்காக அவை பல வர்ணங்களைக் கொண்டுள்ளன. இது பெரிதும் அச்சமூட்டும் வகையில் உள்ளது பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.சுப்பாராவ் கூறியிருந்தார்.


