கோத்தா பாரு, மார்ச் 10 - கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் தாமான்
டேசா மாஸில் உள்ள தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே ஏற்பட்ட
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாச்சாங் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக
வளாகத்தின் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்த கல்வித்
தவணையின் போது உறைவிட கல்லூரி வளாகத்திற்கு மாற்றப்படுவர்.
பல்கலைக்கழக மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில்
கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக யு.ஐ.டி.எம். கிளந்தான்
கிளைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் முகமது அப்பாண்டி மாட் ரானி
கூறினார்.
தற்போது வரை அப்பகுதி ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று
அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட அந்த பகுதி இன்னும் முழுமையாக துப்பரவு
செய்யப்படவில்லை. ஆதலால் மாணவர்கள் அங்குள்ள வீடுகளில்
தொடர்ந்து வாடகைக்கு தங்கியிருப்பதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை.
அதற்கு மாற்றாக அவர்கள் அனைவரும் உறைவிட கல்லூரியில் தங்க
வைக்கப்படுவர்.
அடுத்த கல்வித் தவணையின் போது நுழையும் புதிய மாணவர்களின்
எண்ணிக்கை 500 பேராக மட்டுமே உள்ளது. ஆகவே, கூடுதலாக
மாணவர்களை அங்கு தங்க வைப்பதற்கு போதுமான இடவசதி உள்ளது
என்றார் அவர்.


