சிரம்பான், மார்ச் 10 - லோரி மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட
சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் கெமிஞ்சே-பத்தாங் மலாக்கா சாலையின் 9வது கிலோ
மீட்டரில் நேற்றிரவு நிகழ்ந்தது.
இரவு 7.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் கோல பிலா, தஞ்சோங்
ஈப்போ காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 33 வயதுடைய அந்த
போலீஸ்காரர் தலையில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக சம்பவ
இடத்திலேயே உயிரிழந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் அமிருடின் சரிமான் கூறினார்.
இந்த விபத்து நிகழ்ந்த போது அந்த போலீஸ்காரர் ஜோகூர் சிம்பாங்
ரெங்கமிலிருந்து தஞ்சோங் ஈப்போ போலீஸ் நிலையத்தின் காவலர்
குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவ இடத்தை அடைந்த போது அந்த போலீஸ்காரர் முன்னால்
பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு வாகனத்தை முந்த முயன்றுள்ளார்.
அப்போது எதிரே 32 வயது ஆடவர் ஓட்டி வந்த ஹினோ ரக லோரி
அவரை மோதியது என அவர் குறிப்பிட்டார்.
இவ்விபத்தில் பலியான போலீஸ்காரரின் உடல் சவப்பரிசோதனைக்காக
தம்பின் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர்,
இவ்விபத்து 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது
பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


