ஷா ஆலம், மார்ச் 10 - ஜோர்டானில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த மலேசிய மாணவிகளில் ஒருவரின் குடும்பத்தினரை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று சந்தித்தார்.
பாத்திமா நுஹா முஸ்தஸா என்ற அம்மாணவியின் பெற்றோர் தங்கள் மகளைக் காண ஜோர்டானுக்குப் புறப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
முதா பல்கலைக்கழகத்தில் அரபு மொழி பயிலும் மாணவியான பாத்திமா நுஹா முஸ்தஸா அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பாத்திமா நுஹாவின் பெற்றோருக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவி வழங்கியதாகவும் வெளிநாட்டில் படிப்பைத் தொடரும் அந்த சிலாங்கூர் மாணவியின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாகவும் அமிருடின் கூறினார்.
வெளிநாடுகளில் உள்ள சிலாங்கூர் மாணவர்களின் நலன் தொடர்பான விஷயங்களை மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் அவர் சொன்னார்.
புனித ரமலான் மாதத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நன்மைகள் கிடைக்க ஒன்றாக பிரார்த்தனை செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சாலை விபத்தில் சிக்கிய நான்கு மாணவர்களின் நிலையை தனது அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ரி அப்துல் காடிர் கூறியதாகப் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோர்டானில் பயிலும் இரண்டு சிலாங்கூர் மாணவர்கள் நேற்று பிற்பகல் சாலை விபத்தில் சிக்கியதாக மந்திரி புசார் அமிருடின் கூறியிருந்தார். இவ்விபத்தில் சுமையா அசமுடினுக்கு லேசான காயங்களும் பாத்திமா நுடாவுக்கு பலத்த காயமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


