பாப்பார், மார்ச் 9- போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் அடுத்த மூன்று மாதங்களுக்கு போதுமான அளவு மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தின் உடனடி தலையீடு மிக முக்கியமானது.
உலகளாவிய கச்சா செம்பனை எண்ணெய் விலை உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக சில நிறுவனங்கள் சமையல் எண்ணெய் உற்பத்தியை 50 விழுக்காடு குறைத்ததால் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு கொண்டாடப்படவிருக்கும் ரமலான், நோன்புப் பெருநாள், காமத்தான் விழா மற்றும் காவாய் ஆகிய பண்டிகைகளின் போது மக்களுக்கு போதுமான சமையல் எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதற்கும் இந்த தலையீடு அவசியம் என அவர் சொன்னார். இது ஒரு உடனடி குறுகிய கால சிறப்பு தலையீடாக விளங்குகிறது. ஆனால் நாம் ஒரு நீண்ட கால தீர்வு பற்றியும் சிந்திக்க வேண்டும்.
நீண்ட காலத்திற்கு இந்தப் பிரச்சினையை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் நாங்கள் விவாதிப்போம் என்று அவர் கூறினார்.
சந்தையில் போத்தல் சமையல் எண்ணெயின் விநியோகத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடி தலையீட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தும் என்று நேற்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் ஆகியோரிடம் தற்போதைய விநியோக இடையூறு குறித்து சிறப்பு விளக்கத்தை அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜனவரி மாதத்தில் சராசரி கச்சா சமையல் எண்ணெய் விலை டன் ஒன்றுக்கு 4,672.50 வெள்ளியாகவும் பிப்ரவரியில் 4,759 வெள்ளியாகவும் இருந்ததாக அமைச்சர் மேலும் கூறினார்.


