ஷா ஆலம், மார்ச் 9- சுங்கை கோலோக்கில் நேற்றிரவு தாய்லாந்து நாட்டின் பாதுகாப்புத் தன்னார்வலர்கள் இருவருக்கு எதிராக நடத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து கிளந்தான்-தாய்லாந்து எல்லையில் பொது நடவடிக்கைப் படை (ஜி.ஓ.எப்.) பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் கிளந்தான் வழியாக மலேசியாவிற்கு தப்பிச் செல்வதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பி.ஜி.ஏ. தென்கிழக்கு படைப்பிரிவு தளபதி டத்தோ நிக் ரோஸ் அஜான் நிக் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
எல்லையில் எங்கள் கட்டுப்பாடுகள் ஏற்கனவே வலுவாக உள்ளன. ஆனால் நேற்றிரவு சம்பவத்தைத் தொடர்ந்து நாங்கள் பாதுகாப்பின் அளவை மேலும் அதிகரித்துள்ளோம். துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர்.
எங்கள் எல்லைக் கட்டுப்பாடு 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளது. நாங்கள் அனைத்து கோணங்களிலிருந்தும் கட்டுப்பாட்டை அதிகரிப்போம் என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
முன்னதாக, நேற்றிரவு சுங்கை கோலோக் மாவட்ட அலுவலகத்திற்கு முன்னால் நடந்த ஆயுதமேந்திய தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பில் இரண்டு பாதுகாப்புத் தன்னார்வலர்கள் கொல்லப்பட்டதாகவும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் நோன்பை துறந்த சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதாவது உள்ளூர் நேரப்படி இரவு 7.10 மணியளவில் (மலேசிய நேரப்படி இரவு 8.20 மணி)
இந்தத் தாக்குதல் நடந்தது.
மலேசியர்கள் அடிக்கடி வருகை புரியும் பிக் சி பேரங்காடிக்கு அருகில் சுங்கை கோலோக்-சுங்கை சாவடி சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக சுங்கை கோலோக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் மலேசியர்கள் ஈடுபடவில்லை என்பதை கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் உறுதிப்படுத்தினார்.


