கோலாலம்பூர், மார்ச் 9- இங்குள்ள புடு வட்டாரத்திலுள்ள உள்ள ஒரு பொழுது போக்கு மைய வளாகத்தில் புக்கிட் அமான் உயர்நெறி மற்றும் தர இணக்கத் துறை (ஜிப்ஸ்) நேற்று மாலை 4.00 மணியளவில் நடத்திய சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தி - யிருப்பது உறுதி செய்யப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்பட 55 பேர் கைது செய்யப் பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 19 பெண்களும் அடங்குவர் என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அவர்களில் 22 முதல் 51 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டினர் அடங்குவர்.
இந்த சோதனையின் போது ஒரு ஆடவர் பெத்தமின் போதைப் பொருளையும் ஒரு பெண் எரிமின் 5 போதை மாத்திரையையும் வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
சிறுநீர் பரிசோதனையில் 25 ஆடவர்களும் 17 பெண்களும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
மேல் விசாரணைக்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117 வது பிரிவு, 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 12(2)வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 15(1)(a) பிரிவின் கீழ் அனைத்து சந்தேக நபர்களும் இன்று தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் எந்தவொரு போதைப்பொருள் விநியோகம் அல்லது பயன்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.


