கோலாலம்பூர், மார்ச் 9 - மத நிந்தனை தொடர்பில் நாடு முழுவதும் இருந்து
காவல்துறைக்கு இதுவரை 261 புகார்கள் கிடைத்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் தெரிவித்தார்.
அவற்றில் 150 புகார்கள் ஒரு போதகர் மீதும், 73 புகார்கள் வானொலி தொகுப்பாளர்கள் வழக்கு தொடர்பாகவும், 38 புகார்கள் இரண்டு தனித்தனி காணொளிகளில் இஸ்லாத்தை அவமதித்தது தொடர்பில் இரண்டு நபர்களுக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டன.
இந்து மதத்தை அவமதித்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு மத போதகர் வெளியிட்ட கருத்து தொடர்பாக இஸ்கந்தர் புத்ரியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரிடமிருந்து சமீபத்திய புகார் வந்துள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த 2018 நவம்பர் மாதம் சிலாங்கூரில் உள்ள சீஃபீல்டு இந்து கோவிலுக்கு அருகில் தீயணைப்பு வீரர் முகமது அடிப் முகமது காசிம் இறந்ததற்கும் வானொலி தொகுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட சம்பவத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை மதபோதகர் சுட்டிக்காட்டியதாக புகார்தாரர் கூறியதாக ரசாருடின் விளக்கினார்.
இந்தப் புகார்களை நாங்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(சி) மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரித்து வருகிறோம். மேலும் அந்த நபரின் (மதபோதகர்) வாக்குமூலத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.
விசாரணை அறிக்கை முடிக்கப்பட்டவுடன் மேல் நடவடிக்கைக்காக அது சட்டத்துறைத் தலைவரிடம் வரும் செவ்வாய்கிழமை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மூன்று வானொலி தொகுப்பாளர்கள் பற்றிய விசாரணை அறிக்கை சட்டத்துறைத் தலைவர் அலுவகத்தினால் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் இஸ்லாத்தை அவமதித்து தொடர்பில் தேடப்படும் நபர் குறித்த விவரங்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடமிருந்து காவல்துறை இன்னும் பெறவில்லை என்று ரசாருடின் மேலும் கூறினார்.
அந்த நபர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருப்பதாகவும் (நாட்டிற்கு) உள்ளேயும் வெளியேயும் அவரது நடமாட்டம் குறித்த தரவுகளை குடிநுழைவுத் துறையிடமிருந்து இன்னும் பெறப்படவில்லை என்றும் என்று அவர் தெரிவித்தார்.


