கோலாலம்பூர், மார்ச் 9- சரவா மாநிலத்தில் வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்ட முதல் மாவட்டமாக லாவாஸ் விளங்குகிறது. அதே சமயம், சபாவில் மோசமடைந்தும் வரும் வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சரவாக் மாநிலத்தின் துருசானில் உள்ள நான்கு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததைத் தொடர்ந்து டேவான் துருசானில் திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையங்களில் அக்குடியிருப்பாளர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
துருசான் ஆற்றில் நீர் மட்டம் 0.91 மீட்டராக உயர்வு கண்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று காலை 10.00 மணியளவில் லாவாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சரவா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மைய பேச்சாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
நேற்று காலை தொடங்கி போலீஸ், பொது தற்காப்பு படை, தன்னார்வலர் இலாகா, சுகாதார அமைச்சு, துருசான் மாவட்ட அலுவலகம் மற்றும் சமூக நலத்துறை மேற்கொண்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை மாலை 4.55 மணிக்கு முற்றுப் பெற்றது என அவர் சொன்னார்.
இதனிடியே, சபா மாநிலத்தில் நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,010 பேராக உயர்ந்துள்ளது. நேற்று மாலை இந்த எண்ணிக்கை 154 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேராக இருந்தது.
பியூபோர்ட் மற்றும் மெம்பாக்குட் மாவட்டங்களில் உள்ள 20 குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வேளையில் அங்கிருந்து வெளியேற்றப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.
இதனிடையே, சுங்கை ரம்பை, பாரிட் பெங்குளு தேசிய பள்ளியில் செயல்பட்டு வெள்ள நிவாரண மையம் நேற்று மாலை 5.45 மணிக்கு மூடப்பட்டதைத் தொடர்ந்து மலாக்கா மாநிலத்தில் வெள்ள நிலைமை முழுமையாகச் சீரடைந்துள்ளது.


