NATIONAL

கோத்தா திங்கியில் வெ.2.38 கோடி மதிப்புள்ள மின்-கழிவுப் பொருள்கள் பறிமுதல்- மூவர் கைது

9 மார்ச் 2025, 2:12 AM
கோத்தா திங்கியில் வெ.2.38 கோடி மதிப்புள்ள மின்-கழிவுப் பொருள்கள் பறிமுதல்- மூவர் கைது

கோத்தா திங்கி, மார்ச் 9- இங்குள்ள ஜாலான் லெம்போங்கில் உள்ள சட்டவிரோத தொழிற்சாலை ஒன்றில் அதிரடிச் சோதனை மேற்கொண்ட போலீசார் 2 கோடியே 38 லட்சம் வெள்ளி மதிப்புள்ள வெடி பொருள்கள், தோட்டா உறைகள் உள்ளிட்ட மின்னியல் கழிவுப் பொருள்களைக் கைப்பற்றினர்.

நேற்று முன்தினம் மாலை 4.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 50 வயது சீன பிரஜை 24 வயதுடைய மியன்மார் ஆடவர் மற்றும் 23 வயது மியன்மார் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் யூசுப் ஓத்மான் கூறினார்.

முன்பு தொழிற்சாலையாக பயன்படுத்தப்பட்ட இந்த இந்த வளாகத்தை சம்பந்தப்பட்ட நபர்கள் கடந்த நான்கு மாதங்களாக மின்- கழிவுகளைப் பதப்படுத்தும் மையமாகப் பயன்படுத்தி வந்ததாக அவர் சொன்னார்.

கைதான சீனப் பிரஜை அந்த தொழிற்சாலையின் மேற்பார்வையாளராக செயல்பட்டு வந்த நிலையில் மற்ற அந்நிய நாட்டினர் அங்கு வேலை செய்து வந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் அனைவரும் கடப்பிதழைக் கொண்டுள்ளனர். எனினும், சுற்றுப்பயணிகளுக்கான சோசியல் விசிட் பாஸ் அனுமதியை அவர்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த தொழிற்சாலையின் முக்கியப் புள்ளி உள்பட இதர சந்தேக நபர்களை நாங்கள் தேடி வருகிறோம். இந்த கழிவுகள் எங்கிருந்து வந்தன என்பது குறித்தும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்று சம்பந்தப்பட்ட வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கையில் வெடிபொருள்கள், தோட்டா உறைகள், மின்னியல் பாகங்கள், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள், செம்பு, இரும்புச் சுருளைகள் உள்ளிட்ட பொருள்களோடு புரோட்டோன் எக்ஸ் 50 வாகனம், போர்க்லிப்ட்  உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

கைதானவர்களுக்கு எதிரான முந்தையக் குற்றப்பதிவுகள் இல்லை என்பதோடு அவர்கள் மீதான போதை பொருள் சோதனைகள் நேர்மறையான முடிவுகளைக் காட்டியது. அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் தொடங்கி நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.