கிள்ளான், மார்ச் 7 - மேரு தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள உலோகக் கழிவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது கடல்சார் காவல் துறை முதலாம் மண்டலம் 3 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 12. 3 லட்சம் கிலோ மின் கழிவுகளை பறிமுதல் செய்தது.
சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து காலை 11.00 மணிக்கு நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனையில் 30 வயது உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதன் கமாண்டர் உதவி ஆணையர் ரஸ்லி ஸி அரி கூறினார்.
அந்த தொழிற்சாலை பழைய உலோகப் பொருள்களை மட்டுமே பதப்படுத்தும் உரிமத்தை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் மின் கழிவுகளைப் பதப்படுத்தும் அனுமதி அதனிடம் இல்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த வளாகத்தை ஆய்வு செய்த போது 2005ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தர (அட்டவணையிடப்பட்ட கழிவுகள்) விதிமுறைகளின் அட்டவணையிடப்பட்டவை என கழிவுகள் என வகைப்படுத்தப்பட்ட கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 30 வயதுடைய உள்நாட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் உள்நாட்டவர் என நம்பப்படும் வளாக உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அவர் இன்று பூலாவ் இண்டாவில் உள்ள கடல் போலீஸ் முதலாம் மண்டல தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 16,100 கிலோ செம்பு, பதப்படுத்தப்பட்ட அலுமினியம் (207,900 கிலோ), பதப்படுத்தப்படாத அலுமினியம் (112,000 கிலோ), கலப்பு அலுமினியம் (7,000 கிலோ), பதப்படுத்தப்படாத கலப்பு மின்-கழிவுகள் (23,100 கிலோ), கலப்பு மின்-கழிவுகள் (787,500 கிலோ) மற்றும் அழுத்தப்பட்ட அலுமினியம் (81,000 கிலோ) ஆகியவையும் அடங்கும்.


