அலோர் ஸ்டார், மார்ச் 7- வேகக் கட்டுப்பட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரு பதின்ம ஸயது இளைஞர்கள் உயிரிழந்ததோடு மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த கோர விபத்து இங்குள்ள ஜாலான் தஞ்சோங் பெண்டஹாராவில் உள்ள கான்வென்ட் தேசிய இடைநிலைப் பள்ளிக்கு அருகே நேற்றிரவு நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு இரவு 10.28 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சுமார் 10 நிமிடங்களில் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தை சென்றடைந்ததாக ஜாலான் ராஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் வான் அஜிசுல் ஹக்கீம் வான் ஜாஃபர் கூறினார்.
இந்த விபத்தில்18 வயது நிரம்பிய ஐந்து இளையோர் பயணம் செய்த பெரோடுவா மைவி கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதாக நம்பப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
காரிலிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. பலத்த காயமடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.


