கோலாலம்பூர், மார்ச் 7 - இன்று கூட்டரசு பிரதேச தினம் 2025 கொண்டாட்டத்தை முன்னிட்டு 32 பேருக்கு கூட்டரசு பிரதேச உயரிய விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விருது பெறுவோர் பட்டியில் பிரதமர் துறை (கூட்டரசு பிரதேசம்) அமைச்சர் டாக்டர் சாலேஹா முஸ்தாபா மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இஸ்தானா நெகாராவில் உள்ள பாலாய்ரோங் ஸ்ரீயில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் பேரரசர் சம்பந்தப்பட்டவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஜரித் சோபியாவும் கலந்து கொண்டார்.
விருது பெறுவோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டாக்டர் சாலிஹா மற்றும் கூட்டரசு பிரதேச இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ நோரிடா அப்துல் ரஹீம் ஆகியோருக்கு 'டத்தோஶ்ரீ ' என்ற பட்டத்தைக் கொண்ட டர்ஜா கெபெசார் ஸ்ரீ மக்கோத்தா விலாயா (எஸ்.எம்.டபள்யூ.) விருது வழங்கப்பட்டது.
இதற்கிடையில், டத்தோ என்ற பட்டத்தைக் கொண்ட பங்ளிமா மக்கோத்த விலாயா (பி.எம். டபள்யூ.)) விருதைப் பெற்ற ஒன்பது நபர்களின் பட்டியலில் ஃபாஹ்மி முன்னிலை வகிக்கிறார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த விருது வழங்கும் விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மது ஜாஹிட் ஹமிடி, அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.


