ஷா ஆலம், மார்ச் 7- தஞ்சோங் காராங், சுங்கை பூரோங் பாரிட் 4 வட்டாரத்தில் நேற்று ஏற்பட்ட புயல் பேரிடர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மந்திரி பெசார் கழகம் அல்லது எம்.பி.ஐ. அறவாரியம் உடனடி உதவிகளை வழங்கியுள்ளது.
பாரிட் 4 தேசியப் பள்ளியின் கூரையை மாற்றுவதற்கும் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பணி நாளை தொடங்கும் என்றும் அதன் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர்
கூறினார்.
நேற்று காலை வீசிய பலத்த புயலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று சேதத்தை மதிப்பிடவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்கவும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எனக்கு உத்தரவிட்டார்.
எனது பயணத்தின் முதல் இடம் பாரிட் 4 தேசியப் பள்ளியாகும். அங்கு பள்ளி கட்டிடம், ஆசிரியர் குடியிருப்புகள், சிற்றுண்டிச் சாலை மற்றும் கார் நிறுத்தம் ஆகியவற்றின் கூரைகள் சேதமடைந்தத்தைக் கண்டேன். எம.பி.ஐ. அறவாரியம் மூலம் இன்று காலை கூரையை மாற்றும் பணியைத் தொடங்குவதன் மூலம் உடனடி தீர்வு செயல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.
அதன் பின்னர் அதே பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை நான் பார்வையிட்டேன். சுங்கை பூரோங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மருவான் அகமதுவுடன் ஒருங்கிணைந்து உடனடி உதவிகள் வழங்கப்படும் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவி ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று தான் நம்புவதாக அஸ்ரி மேலும் கூறினார். நேற்று காலை பாரிட் 4 பகுதியில் ஏற்பட்ட பலத்த புயல் காரணமாக எட்டு வீடுகள் சேதமடைந்தன.
காலை 7.30 மணியளவில் நடந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீடுகள் கடுமையாக சேதமடைந்த அனைத்து குடும்பங்களுக்கும் மாநில அரசு 500 வெள்ளி உதவித் தொகையை வழங்கியது.


