ஈப்போ, மார்ச் 7- பேங்க் நெகாரா அதிகாரி எனக் கூறிக் கொண்ட நபரின்
தொலைபேசி மோசடியில் சிக்கிய பெண்மணி ஒருவர் தனது வாழ்நாள்
சேமிப்பையும் வர்த்தகம் மூலம் கிடைத்த வருமானத்தையும் பறிகொடுத்தார்.
தாம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம்
தொடர்பான வழக்கிற்கு தீர்வு காண்பதற்காக அந்த பணம் செலுத்தப்பட்டதாக 45 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட இடைக்காலப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது சஜிடான் அப்துல் சுக்கோர் கூறினார்.
அச்சம் காரணமாக அந்த பெண் சந்தேகப் பேர்வழியின் உத்தரவை ஏற்று
கடந்தாண்டு டிசம்பர் 3 முதல் இவ்வாண்டு பிப்ரவரி 10 வரை மூன்று
வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 12 லட்சத்து 80 ஆயிரம்
வெள்ளியை மாற்றியுள்ளார் என அவர் தெரிவித்தார்.
அந்த பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த
போதிலும் நேற்று வரை பணம் திரும்ப கிடைக்காததைத் தொடர்ந்து இந்த
மோசடி குறித்து அவர் போலீசில் புகார் செய்ததாக முகமது சஜிடாடன்
குறிப்பிட்டார்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது
பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும்
சொன்னார்.
அறிமுகம் இல்லாத நபர்கள் தொலைபேசி வழி சுமத்தும் எந்தக்
குற்றசாட்டையும் எளிதில் நம்பிவிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு
அவர் ஆலோசனை வழங்கினார்.


