கோலாலம்பூர், மார்ச் 7 - கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க
அதிகாரிகளை காயப்படுத்தியது தொடர்பில் ஒரு பெண் உள்பட நால்வர்
விசாரணைக்காக நேற்று தொடங்கி இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரு வேறு இடங்களில் கண்காணிப்பு பணியை
மேற்கொண்டிருந்த கோலாலம்பூர் மாநகர் மன்ற (டி.பி.கே.எல்.) அமலாக்க
அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட அந்நபர்கள் கைகலப்பில் ஈடுபட்டதாக டாங்
வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அப்பாண்டி
சுலைமான் கூறினார்.
பதினைந்து முதல் 39 வயது வரையிலான அவர்கள் அனைவரும்
அரசாங்க ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பில்
குற்றவியல் சட்டத்தின் 186வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
காயம் விளைவித்தது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின்
கீழும் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று
அவர் மேலும் சொன்னார்.
இங்குள்ள லோரோங் பெந்தேங்கில் நேற்று முனதினம் காலை 11.300
மணியவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த உணவு வாகனத்தை
அப்புறப்படுத்தும்படி மாநகர் மன்ற அதிகாரிகள் உத்தரவிட்டதைத்
தொடர்ந்து பெண்மணி ஒருவருக்கும் அமலாக்க அதிகாரிகளுக்கும்
இடையே கைகலப்பு மூண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த கைகலப்பின் போது சம்பந்தப்பட்ட பெண்மணி அமலாக்க அதிகாரி
ஒருவரின் கையைக் கடித்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர்
அந்தப் பெண் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்
நேற்று வரை இரு தினங்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்று
அவர் குறிப்பிட்டார்.
இரண்டாவது சம்பவம் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் இரவு 10.08
மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறிய அவர், இச்சம்பவத்தில் வர்த்தக வளாகம்
ஒன்றின் எதிரே மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளுக்கும் வணிகர்கள்
சிலருக்கும் இடையே கைகலப்பு மூண்டது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் 15 முதல் 39 வயது வரையிலான மூன்று
நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.


