கிள்ளான், மார்ச். 7 - இங்குள்ள வடக்கு மற்றும் மேற்கு துறைமுகங்களில்
கடந்த மாதம் சுங்கத் துறை மேற்கொண்ட வெவ்வேறு சோதனை
நடவடிக்கைகளில் சுமார் 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள வேன் கேபின்கள்,
ஷிசா புகையிலை, மதுபானங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல்
செய்யப்பட்டன.
வட கிள்ளான் துறைமுகத்தில் ஐந்து கொள்கலன்கள் மீது கடந்த ஜனவரி
மாதம் 7ஆம் தேதி நடத்தப்பட்டச் சோதனையில் 880,861 வெள்ளி
மதிப்புள்ள முழுமையாக கட்டமைக்கப்பட்ட (சி.பி.யு.) பத்து வேன்
கேபின்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறையின் உதவி தலைமை
இயக்குநர் டாக்டர் அகமது தவுபிக் சுலைமான் கூறினார்.
அந்த கேபின்கள் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சின்
அனுமதி பெர்மிட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு சுங்கத்
துறையின் விதிகளுக்கு ஏற்ப அவை சி.கே.டி. எனப்படும் பிரிக்கபட்ட
நிலையில் கொண்டு வரப்படாதது இச்சோதனையில் கண்டறியப்பட்டது
என்று அவர் சொன்னார்.
கடந்த ஜனவரி 9ஆம் தேதி மேற்கு துறைமுகத்தில் உள்ள கிடங்கு
ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 131,251 வெள்ளி
மதிப்பிலான 606.60 லிட்டர் அளவு கொண்ட 868 போத்தல் மதுபானங்கள்
பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் மேற்கு துறைமுகத்தில் இருந்த இரு
கொள்கலன்களைச் சோதனையிட்ட அதிகாரிகள் 16 லட்சம் வெள்ளி
மதிப்புள்ள 39,000 போத்தல் மதுபானங்களை கைப்பற்றியதாகவும் அவர்
குறிப்பிட்டார். அந்த இரு கொள்கலன்களும் தளவாடப் பொருள்கள் எனப்
பிரகடனப்படுத்தப்பட்டு நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக அவர்
சொன்னார்.
கடந்த ஜனவரி 9ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில்
மேற்கு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து 17 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள ஷிசா புகையிலை கைப்பற்றப்பட்டதாகவும் அவர்
குறிப்பிட்டார்.


