கோலாலம்பூர், மார்ச் 7 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமையகத்தில் இன்று நடைபெறவிருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமைக்கு (மார்ச் 13) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இன்னும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் ஊழல் மற்றும் பணமோசடி விசாரணையுடன் தொடர்புடைய வாக்குமூலப் பதிவை திட்டமிட்டபடி தொடர முடியாது என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
இந்த விசாரணைக்கு உதவ அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராக வேண்டும். ஆனால், அவர் இன்னும் மருத்துவ விடுப்பில் இருப்பதால் இந்நடவடிக்கையைத் தொடர முடியவில்லை என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்தார்.
அந்த முன்னாள் பிரதமர் இன்று காலை 10.00 மணிக்கு எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் ஊழல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பார் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி இஸ்மாயில் தனது சொத்து விபரங்களை எம்.ஏ.சி.சி.யிடம் சமர்ப்பித்தார். பின்னர் பிப்ரவரி 19 ஆம் தேதி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, எம்.ஏ.சி.சி. நடத்திய சோதனையின் போது ஒரு 'பாதுகாப்பு வீட்டில்' சுமார் 17 கோடி வெள்ளி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணையில் இஸ்மாயில் சந்தேக நபர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதாக அசாம் கூறியிருந்தார்.
அவரது பதவிக் காலத்தில் விளம்பர மற்றும் ஊக்குவிப்பு நோக்கங்களுக்காக செலவிடப்பட்ட மற்றும் பெறப்பட்ட நிதி குறித்து இந்த விசாரணையில் கவனம் செலுத்தப்படுகிறது.
இதன் தொடர்பில் இதுவரை 31 நபர்களிடம் எம்.ஏ.சி.சி. வாக்குமூலம் பதிவு செய்துள்ளதோடு சுமார் 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 13 வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது.
தாய்லாந்து பாட், சவுதி ரியால், பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங், தென் கொரிய வோன், யூரோ, சுவிஸ் பிராங்க் மற்றும் சீன யுவான் வெளிநாட்டு நாணயங்கள் உள்பட சுமார் 17 கோடி வெள்ளி மதிப்புள்ள ரொக்கமும் கிட்டத்தட்ட 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
இதற்கிடையில், வியாழக்கிழமை வாக்குமூலம் அளிக்க வரவழைக்கப்படுவதற்கு முன்பு, இஸ்மாயிலின் உடல்நிலையை உறுதிப்படுத்த அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடமிருந்து அறிக்கையை எம்.ஏ.சி.சி. பதிவு செய்யும் என்று வட்டாரம் கூறியது.


