கோலாலம்பூர், மார்ச் 7- சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் குடிநுழைவுத் துறையினர் நேற்று முன்தினம் இரவு நடத்திய சோதனையில் 80 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் 17 முதல் 45 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் மற்றும் 75 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டதாக சிலாங்கூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் அமினஸ் கமாருடின் கூறினார்.
வங்காளதேசம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிற நாடுகளைச் சேர்ந்த
அவர்கள் அனைவரும் அந்த பொழுதுபோக்கு மையத்தில் பணியாளர்களாக வேலை செய்து வந்ததாக நம்பப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இச் சோதணையின் போது அந்நியக் குடியேறிகளில் சிலர் பொழுதுபோக்கு மையத்தில் இருந்த உள்நாட்டு வாடிக்கையாளர்களின் காதலிகளாக நடிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் அந்த தந்திரம் பலிக்கவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சட்டவிரோதக் குடியேறிகள் நடமாட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு இந்த 'ஓப் கெகார்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அவரகள் அனைவரும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(சி) மற்றும் 1963 குடிநுழைவு விதிமுறைகளின் ஒழுங்குமுறை 39 (பி) ஆகியவற்றின் கீழ் மேல் விசாரணைக்காக செமினி குடிநுழைவு முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.


