ஷா ஆலம், மார்ச் 6: மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வழி சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மாநில அரசு வழங்கி வரும் பொருளாதார உதவிகளை தொடரும் என அறிக்கை ஒன்றில் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு தெரிவித்தார்.
இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவித் திட்டம் RM5 மில்லியன் ஒதுக்கீட்டில் தொடரும். கடந்த ஆண்டு முதல் முறையாக புதிய வழிகாட்டுதல்களை அமல் படுத்திய போது, அதில் காணப்படும் சில பலவீனங்கள் சீர்படுத்தி நியாயமான ஒதுக்கீட்டுக்கு இவ்வாண்டு ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
இந்த ஆண்டு, STEM மற்றும் TVET தொடர்பான கல்வித் திட்டங்களுக்கு 20% அதிகரிப்புடன், நிதி ஒதுக்கீட்டில் 30%-70% இலிருந்து 50%-50% ஆக ஒரு சிறிய மாற்றத்தைச் செய்துள்ளோம் என்றார். அதே நேரத்தில், பள்ளி கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான ஒதுக்கீடுகள் 50% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் வழி, மாணவர்களின் STEM மற்றும் TVET திறன்களை மேம்படுத்த அந்த ஒதுக்கீடுகள் பயன்படுத்தலாம் என்றார்.
STEM என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் என்பதன் சுருக்கமாகும். இந்த நான்கு பகுதிகளையும் இணைத்து சிக்கல் தீர்க்கும் திறன்கள், படைப்பாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் புதுமை ஆகியவற்றை உருவாக்கும் கற்றல் அணுகுமுறையைக் குறிக்கிறது. பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி அறிவியல் உள்ளிட்ட பல தொழில்கள் இந்தத் துறைகளில் திறன்களைச் சார்ந்திருப்பதால், நவீன உலகில் STEM மிகவும் முக்கியமானது.
மேலும், STEM கல்வி மாணவர்களை அன்றாட வாழ்வில் அறிவை ஆராய்வதற்கும், பரிசோதனை செய்வதற்கும், நடைமுறை ரீதியாகப் பயன்படுத்துவதற்கும் ஊக்குவிக்கிறது.
இதற்கிடையில், TVET என்பது தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சியைக் குறிக்கிறது. இது வேலை சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொழில்நுட்ப மற்றும் தொழில் துறைகளில் அறிவு மற்றும் நடைமுறை திறன்களை வழங்கும் கல்வி மற்றும் பயிற்சி முறையைக் குறிக்கிறது.
TVET பொறியியல், தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல், சமையல், வாகனம் மற்றும் பல துறைகளை உள்ளடக்கியது. தொழிற்கல்வி கல்லூரிகள், தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சமூகக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்களில் TVET திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
எல்.பி.எஸ் இல்லாத பள்ளிகளின் பிரச்சனைக்கு தீர்வுக்காண இரு முறைகளை நாங்கள் முன் மொழிந்துள்ளோம்.
முதல் தீர்வு பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை வாரியம் உள்ள பள்ளிகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி ஒதுக்கீட்டைப் பிரிக்க வேண்டும். இதில் STEM மற்றும் TVET தொடர்பான பாடத்திட்டத்தின் வளர்ச்சியை நிர்வகிக்க பெற்றோர்-ஆசிரியர் சங்கத்திற்கு 50% மற்றும் பள்ளி கட்டிடங்கள், உள்கட்டமைப்புகளின் புதுப்பித்தல் பணிகளுக்காகப் பள்ளி மேலாண்மை வாரியத்திற்கு 50% வழங்கப்படும்.
இரண்டாவது தீர்வு பள்ளி மேலாண்மை வாரியம் இல்லாத பள்ளிகளுக்கு, ஒதுக்கீடு முழுமையாகப் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தால் நிர்வகிக்கப்படும். இருப்பினும், விதிக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளுக்கு இணங்கி ஒதுக்கீட்டை பயன்படுத்த வேண்டும். மேலும், குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப் படுகின்றனவா என்பதையும் அவர்கள் கண்காணிக்க வேண்டும்.
எனவே, அரசு ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒவ்வொரு பள்ளியும் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப நிதியைப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இரண்டு அறிக்கைகளை மாநில அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அவை STEM மற்றும் TVET தொடர்பான கல்வித் திட்ட அறிக்கை மற்றும் பள்ளி கட்டிடம், உள்கட்டமைப்பு புதுப்பித்தல் பணி அறிக்கை ஆகும்.
பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை வாரியம் ஆகியவை விநியோகிக்கப்பட்ட முழு ஒதுக் கீட்டையும் எந்த இருப்புத் தொகையும் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என நினைவூட்டப்படுகிறது. ஏனெனில் மீதமுள்ள ஒதுக்கீட்டை பள்ளி வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது.
இந்த நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், எதிர்வரும் ஆண்டுகளில் அந்த பள்ளிக்கு எந்த ஒரு மானிய ஒதுக்கீடும் மாநில அரசு அங்கீகரிக்காது.
இந்த உதவி மூலம் மாணவர்கள் முடிந்தவரை பயனடைவதை உறுதி செய்வதற்கும், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் கட்டிடங்கள் மற்றும் உள் கட்டமைப்பின் தரத்தை மேம் படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பாப்பாராய்டு கேட்டு கொண்டார்.


