கோலாலம்பூர், மார்ச் 6 - வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிக்
கும்பல்களிடம் சிக்கிய 750 மலேசியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு
தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில்
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட வேளையில் மேலும் எண்மரை
நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் கொள்ளப்பட்டு வருவதாக
நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட வெளியுறவு அமைச்சின்
எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் சிக்கிய மேலும் 236 பேர் தேடப்பட்டு வரும் நிலையில்
இதில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் மொத்த எண்ணிக்கை 994 பேராகப்
பதிவாகியுள்து. குடும்பத்தினர், நண்பர்கள், காவல் துறை அல்லது
தனிநபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் எந்த எண்ணிக்கை
பெறப்பட்டது என்று அமைச்சு தெரிவித்தது.
வெளிநாடுகளில் ஏமாற்றப்பட்டு இணையக் குற்ற மையங்களில் வேலை
செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட மலேசியர்களை மீட்பதற்கு அரசாங்கம்
எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கம்பார் தொகுதி பக்கத்தான்
ஹராப்பான் உறுப்பினர் சோங் ஜெமின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு
இவ்வாறு பதிலளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மலேசியர்களை மீட்கும் நடவடிக்கைகள் வெளிநாட்டு
அரசதந்திரிகள், அரச மலேசியா போலீஸ் படை மற்றும் உள்நாட்டு
அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வெளியுறவு அமைச்சு மேற்கொண்டு
வருகிறது.
தொடர் விசாரணை மற்றும் மோசடிக் கும்பலில் ஈடுபாடு தொடர்பான
தகவல்களை அறிந்து கொள்வதற்காக மலேசியாவுக்கு திரும்பும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் போலீசார் வாக்கு மூலம் பதிவு செய்வர் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக அல்லாமல் மோசடிக் கும்பலுக்கு ஆள்
சேர்ப்பவர்களாக உள்ளதற்கான வலுவான ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில்
200ஆம் ஆண்டு மனிதக் கடத்தல் எதிர்ப்பு மற்றும் புலம் பெயர்ந்தோர்
பதுக்கல் எதிர்ப்ப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்படும் எனக் கூறிய அவர், இப்பிரிவின் கீழ் குற்றம்
புரிந்தவர்களுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்
என்றார்.


