(ஆர்.ராஜா)
கிள்ளான், மார்ச் 6 - இந்து சமயத்தை இழிவுப்படுத்தும் வகையிலான
அறிக்கையை சமூக ஊடகங்களில் பதிவிட்ட ஜாம்ரி வினோத் என்ற
நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி செந்தோசா சட்டமன்ற
உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்துக்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய வகையில் கருத்துகளை
வெளியிட்ட அந்நபரின் செயலை வன்மையாகக் கண்டித்த அவர்,
இத்தகைய செயல்கள் பல்லின ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்
என்பதோடு இனங்களுக்கிடையே பதட்டத்தையும் ஏற்படுத்தும் எனக்
கூறினார்.
அந்நபர் இந்து சமய வழிபாடுகளை இழிவுபடுத்துவதோடு மட்டும்
நின்றுவிடவில்லை. மாறாக, தீயணைப்பு வீரர் ஒருவரின் மரணம்
சம்பந்தப்பட்ட சீபீல்டு தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயச்
சம்பவத்தையும் இதனுடன் தொடர்பு படுத்தியுள்ளார். அவரது இந்த செயல்
இன நல்லிணக்கத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தும் என்று மந்திரி புசாரின்
இந்திய சமூகத்திற்கான சிறப்பு அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய
1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் உள்பட நடப்புச் சட்டங்களின் கீழ்
அந்நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை அமைச்சரைத்
தாம் கேட்டுக் கொள்வதாக குணராஜ் இன்று வெளியிட்ட அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
மலேசியர்கள் மத்தியில் பிரிவினையையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் செயலில் ஒரு சிலர் தொடர்ந்து ஈடுபடுவதை நாம் அனுமதிக்க முடியாது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவது நமது அனைவரின் கடமையாகும். சமூகத்தின் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார்.
ஒற்றுமையை சீர்க்குலைக்கும் முயற்சிக்கு மலேசியர்கள் ஒரு போதும்
துணைப் போகக் கூடாது என்பதோடு அமைதி, ஒருவரை ஒருவர் மதித்தல்
மற்றும் தேசிய ஒற்றுமை ஆகிய கோட்பாடுகளை உறுதியாகக் கடைபிடிக்க
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


