புத்ராஜெயா, மார்ச் 6 - அடுத்த வாரம் தொடங்கி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மடாணி அரசாங்கத்தின் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாநிலங்கள் தோறும் செல்லவிருக்கின்றார்.
அதே வேளையில், மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் மாநில வளர்ச்சி சிறப்புக் கூட்டங்களுக்கும் பிரதமர் தலைமையேற்பார் என்று பிரதமரின் மூத்த பத்திரிக்கைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைடா கூறினார்.
"பல விவகாரங்கள் குறித்து கலந்துரையாட பிரதமர் தாமே சில நிகழ்ச்சி நிரல்களை தயார் செய்துள்ளார். தீவிர வறுமையை ஒழிப்பதற்கான நிகழ்ச்சி நிரலுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதோடு, மாநில அரசாங்க தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வார்," என்று அவர் தெரிவித்தார்.
மலேசிய பிரதமர் அலுவலகம் மற்றும் அன்வார் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் தினசரி விளக்கமளிப்பில் அவர் அதனை தெரிவித்தார்.


