புத்ராஜெயா, மார்ச் 6 - வானொலி நிலையமான ஏரா எஃப்.எம்.மின் டிக்டோக் செயலியில் பதிவேற்றப்பட்ட இந்து மதத்தை கேலி செய்யும் காணொளி தொடர்பான விசாரணை அறிக்கை இன்று துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்.
சட்டத் திருத்தத்திற்குப் பிந்தைய விதிகளின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக ஆஸ்ட்ரோவின் உயர் நிர்வாகத்தினரை தாங்கள் அழைத்துள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.
இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக ஏரா எஃப்.எம். உரிமத்தை தற்காலிகமாக முடக்குவதற்கான நோக்க அறிவிப்பும் லைசென்ஸ் உரிமையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்தக ஆணையம் கூறியது.
எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பும் கருத்துத் தெரிவிக்க லைசென்ஸ் உரிமையாளருக்கு 30 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரோ வானொலி தொகுப்பாளர் ஒரு இந்து மத நிகழ்வை கேலி செய்வது போல் நடந்து கொண்டதைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புக்கிட் அமான் காவல் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க மூன்று ஏரா எஃப்.எம். வானொலி தொகுப்பாளர்கள் உட்பட ஆறு நபர்கள் அழைக்கப்பட்டனர்.


