கோலாலம்பூர், மார்ச் 6 - அனைத்துலக அளவில் மலேசியாவிற்கு, தேசிய மகளிர் திடல் போலிங் விளையாட்டாளர் நோர் ஃபரா அயின் அப்துல்லா தொடர்ந்து பெருமை சேர்த்துள்ளார்.
உலக கிண்ணத் தொடரில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் உலகத் தரவரிசை அடிப்படையில், முதல் முறையாக முதல் நிலைக்கு முன்னேறி அவர் வரலாறு படைத்துள்ளார்.
திடல் போலிங் விளையாட்டின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அடிப்படையில், நோர் ஃபரா தற்போது 723 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஸ்காட்லாந்தின் ஜூலி ஃபாரஸ்ட், 683 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 676 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் கெல்சி கோட்ரெல் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கெர்ன்சியில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு உலக உள்ளரங்கு திடல் போலிங் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நோர் ஃபரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும், கலப்பு இரட்டையர் பிரிவில், இசாட் ஷாமீர் சூல்கிப்ளியுடன் களம் கண்ட 24 வயது நோர் ஃபரா வெண்கலம் வென்றார்.


