புத்ரா ஜெயா, பிப். 6 - இந்து சமய நிகழ்வை கேலி செய்வதைச் சித்தரிக்கும்
காணொளி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து அந்த சம்பவத்திற்கு
மன்னிப்பு கோரிய ஏரா எஃப்.எம். ரேடியோ நிலையத்தின் மூன்று
தொகுப்பாளர்களின் செயலை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின்
நசுத்தியோன் இஸ்மாயில் பாராட்டியுள்ளார்.
அவர்கள் மன்னிப்பு கோரிய போதிலும் இதன் தொடர்பான விசாரணை
தொடர்ந்து நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.
போலீசில் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் அது குறித்து விசாரிப்பது
போலீசாரின் கடமையாகும். குற்றஞ்சாட்டுவதற்கு அடிப்படை உள்ளதா
என்பதை முடிவு செய்வது துணை அரசு தரப்பு வழக்கறிஞரைப்
பொறுத்ததாகும் என அவர் சொன்னார்.
மன்னிப்பு கோரியது உண்மையில் ஒரு நல்ல செயலாகும். தாங்கள் உதிர்த்த வார்த்தையும் புரிந்த செயலும் தவறான ஒன்று என்பதை அவர்கள் உணர்ந்து விட்டனர்.
இருப்பினும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது உண்மைதான் என அவர் கூறினார்.
நேற்று இங்கு உள்துறை அமைச்சின் பணியாளர்கள் மத்தியில்
மதிப்புக்கூறுகளை புகுத்துவது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சமய மற்றும் கலாச்சார பன்முகத் தன்மை கொண்ட இந்நாட்டில் இன
உறவுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனமுடன் இருக்க
வேண்டும் என்ற படிப்பினையை இந்த நிகழ்வு உணர்த்துகிறது என்றும்
அவர் சொன்னார்.
நமது கலாச்சாரத்தையும் சமய உணர்வுகளையும் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நாம் விரும்புகிறோம். அதே போல் நாமும் அத்தகைய உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நல்லிணத்துடன் வாழ முடியும் என அவர் கூறினார்.


