கோலாலம்பூர், மார்ச் 6 – ஜனவரி 31 வரைக்கும் கிடைத்த தகலின் அடிப்படையில், மொத்தமாக 12.7 பில்லியன் ரிங்கிட் பணம் இன்னமும் உரிமையாளர்கள் அல்லது அதிகாரப்பூர்வ வாரிசுத்தாரர்களால் கோரப்படாமல் உள்ளது.
தங்களுக்குரியப் பணத்தைக் கோர, சம்பந்தப்பட்டவர்கள் eGUMIS இணைய அகப்பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது தலைமைக் கணக்காளார் துறையின் மாநில அலுவலங்களுக்குச் சென்று பாரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மக்களவையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்தார்.
கோரப்படாமல் உள்ள பணத்தையும் அதனைக் கோருவதற்கான வழிமுறைகள் குறித்தும் மக்களுக்குத் தெரியப்படுத்த ஏதுவாக, அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசாங்க – தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும், பொது நாள் கொண்டாட்டங்களிலும், பொது வளாகங்களில் நடைபெறும் வாடிக்கையாளர் சேவை நிகழ்வுகளிலும் விழிப்புணர்வு இயக்கங்களை மேற்கொள்வதும் அவற்றில் அடங்கும்.
கடந்தாண்டு இறுதி வரை நாடு முழுவதும் அத்தகைய 158 விழிப்புணர்வு பிரச்சாரங்க முகாம்களும் விளக்கமளிப்புக் கூடாரங்களும் அமைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
இது தவிர, அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இணையம் வாயிலாக பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
பொது மக்களின் வசதிக்காக, 24 மாநில மற்றும் கிளை அலுவலகங்களில் உரிமைக் கோரப்படாதப் பண விண்ணப்ப முகப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.


