கோலாலம்பூர், மார்ச் 6 - கெடா மாநில அரசின் துணை நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையைப் பெறுவதற்காக நபர் ஒருவரிடமிருந்து சுமார் 400,000 வெள்ளி லஞ்சம் கேட்டு பெற்ற சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தொழிலதிபர் ஒருவரை கைது செய்து காவலில் வைத்துள்ளது.
ரேற்று காலை அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்.ஏ.சி.சி. தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் சித்தி நோர்ஹிடாயா முகமது நூர், 40 வயதுடைய அந்த சந்தேக நபரை நேற்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்ததாக எம்.ஏ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் கெடா எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த போது அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கூட்டுத் திட்டத்திற்கான நில பயன்பாட்டு உரிமையைப் பெற உதவுவதற்காக சந்தேக நபர் கையூட்டு கேட்டது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக நம்பப்படுகிறது. கடந்த 2020 ஜூன் மாதவாக்கில் சந்தேக நபர் இந்தக் குற்றத்தைச் புரிந்ததாக நம்பப்படுகிறது.
இதற்கிடையில், கெடா எம் ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ அகமது நிஜாம் இஸ்மாயிலை பெர்னாமா தொடர்பு கொண்டபோது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதையும் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(a)(A) பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.


