கோலாலம்பூர், மார்ச் 5 - சபா மற்றும் சரவாக்கில் உள்ள கிராமப்புற பள்ளிகளில் இவ்வாண்டு 302 ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறைக்கு (ஜே.பி.எஸ்.) 4 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
சபா மற்றும் சரவாக்கின் உட்புறப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணற்று நீர் விநியோகக் கட்டுமானத்தை செயல்படுத்துவதற்காக தாங்கள் சபா மற்றும் சரவாக் மாநில அரசுகள் மற்றும் பொதுப்பணித் துறையுடனும் (ஜே.கே.ஆர்) அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
கடந்த 2021 முதல் இப்போது வரை அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 9.45 கோடி வெள்ளியாகும். இந்தத் திட்டத்தின் கீழ் சபாவில் 79 பள்ளிகள், சரவாக்கில் 11 பள்ளிகளை உள்பட மொத்தம் 90 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு இந்தத் திட்டத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
64 பள்ளிகளுக்கான திட்டத்தின் சராசரி கட்டுமான முன்னேற்றம் 59.85 விழுக்காடு எட்டியுள்ள நிலையில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணித் திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
கிராமப்புறப் பள்ளிகளுக்கு குறிப்பாக இன்னும் சுத்தமான நீர் கிடைக்காத பள்ளிகளுக்கு தூய்மையான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான அமைச்சின் முயற்சிகள் குறித்து ஜூலாவ் தொகுதி உறுப்பினர் டத்தோ லேரி சாங் எழுப்பிய கேள்விக்கு துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.


