கோலாலம்பூர், மார்ச் 5 – தைப்பூசக் காவடியாட்டத்தை கேலி செய்து தனியார் வானொலி வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், சமயங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதை அவசியம் என மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாகிம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மற்ற மதங்களை இழிவுப்படுத்தும் செயலானது இஸ்லாத்துக்கு எதிரானது என அதன் தலைமை இயக்குநர் சிராஜுடின் சுஹாமி தெரிவித்தார். அதோடு மக்கள் மத்தியில் தேவையற்ற சச்சரவை ஏற்படுத்தும்.
பல்லினங்களையும் பல்வேறு சமய நம்பிக்கைகளையும் கொண்ட மலேசியாவில், மரியாதை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை முக்கியம் என்றார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட சமய சுதந்திரத்தை அனைவரும் மதிக்க வேண்டும். பேச்சிலும் செயலிலும் இன்னொரு மதத்தின் நம்பிக்கைகளையும் பாரம்பரியத்தையும் இழிவுப்படுத்தக் கூடாது என்று சிராஜுடின் கேட்டு கொண்டார்.


