கோலாலம்பூர், மார்ச் 5 - மலேசியா மடாணி திட்ட நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான கொள்கை மற்றும் இலக்கை அமைப்பதற்குப் பொறுப்பான மலேசியா மடாணி நடவடிக்கை மன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதல்
ஆய்வரங்கிற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தலைமை தாங்கினார்.
மடாணி அரசாங்கத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் மேம்பாடுகள் தொடர்பான முடிவுகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவது தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் மிக உயர்ந்த மன்றமாக எம்.டி.எம்.எம். விளங்குகிறது என்று பிரதமர் கூறினார்.
மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக மடாணி அரசாங்கத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது தொடர்பாக மன்ற உறுப்பினர்களுடன் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்று அவர் முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.
எம்.டி.எம்.எம்.இல் எடுக்கப்படும் எந்தவொரு முன்மொழிவு மற்றும் முடிவும், தலைமைச் செயலாளர் தலைமையிலான சீர்திருத்தத்திற்கான சிறப்புப் பணிக்குழு (ஸ்டார்) மூலம் அடுத்த கட்ட நடவடிக்கை கொண்டுச் செல்லப்படும் என்று அன்வார் கூறினார்.
அரசு நிறுவனங்களுக்குள் ஏற்படுத்தப்படும் இந்த ஒருங்கிணைப்பு, இலக்குகள் அடையப்படுவதை உறுதிசெய்து மிகவும் சிறப்பான முடிவுகளைத் தரும் என்று நான் நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.


