கோலாலம்பூர், மார்ச் 4 - ரமலான் நோன்பு மாதம் மற்றும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி போது அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்திற்கு (KPDN) அறிவுறுத்தியுள்ளார்.
`Op Pantau 2025` மூலம் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை தீவிரப்படுத்தவும் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகப் பிரதமரின் மூத்த செய்தித் தொடர்பாளர் துங்கு நஷ்ருல் அபைதா கூறினார்.
“மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு தொடர்பான முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பிரதமர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலியுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
“பொருட்கள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டால் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து தலையீட்டு உத்திகளை உடனடியாக செயல்படுத்த என பிரதமர் தெரிவித்துள்ளார்,” என்று துங்கு நஷ்ருல் அபைதா முகநூலில் வழி தெரிவித்தார்.
நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தினசரி விளக்கத்தின் போது பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்தது.
விரைவில் அறிவிக்கப்படும் பண்டிகைக் கால அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்களுக்கான விலைகள் உட்பட, அரசாங்கம் நிர்ணயித்த உச்சவரம்பு விலைக்கு இணங்குவதை உறுதி செய்வதில் KPDN இன்னும் உறுதியாக இருக்க வேண்டும் என அன்வார் வலியுறுத்தியதாக துங்கு நஷ்ருல் மேலும் கூறினார்.
சில தரப்பினரால் நியாயமற்ற விலை உயர்வுகளைத் தடுக்க, ரமலான் பஜாரில் உணவு விலைகளைக் கண்காணிக்க அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் என்றும் பிரதமர் விரும்பினார்.
“மேலும், சிறு வணிகர்களை ஆதரிக்கும் அதே வேளையில், உணவு விலைகள் மற்றும் தரத்தை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் பல ரமலான் பஜாருக்குச் செல்வார்.
“ரமலான் மாதம் முழுவதும் மடாணி ரஹ்மா விற்பனைத் திட்டம் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்,” என துங்கு நஷ்ருல் கூறினார்.
— பெர்னாமா


