கொலும்பு, மார்ச் 5 - 2025 இலங்கை அனைத்துலக பூப்பந்து போட்டியில் நாட்டின் ஆடவர் ஒற்றையர் விளையாட்டாளர் ஐடில் ஷோலே அலி சடிகின் தமது முதல் கிண்ணத்தை வென்றுள்ளார்.
இது ஐடிலுக்கு இரண்டாவது அனைத்துலக போட்டியாகும். முதன் முதலில் அவர் 2023ஆம் ஆண்டில் இந்தோனேசிய அனைத்துலக பூப்பந்து போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கொலும்பு, செயின்ட் ஜோசப் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஐடில், இந்தியாவின் பிரனாய் கட்டாவுடன் மோதினார்.
இவ்வாட்டத்தில் உலகின் 68-வது நிலையில் உள்ள ஐடில் 21-19 21-15 என்ற புள்ளிகளில் எளிதாக வெற்றி பெற்றார். இவர்களின் ஆட்டம் 47 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
முன்னதாக அரையிறுதி ஆட்டத்தில், உபசரணை நாட்டின் வீரேன் நெட்டசிங்கவை 21-16 21-18 என்ற புள்ளிகளில் தோற்கடித்து ஐடில் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியிருந்தார்.
இந்த வெற்றியின் வழி, ஐடிலுக்கு 78 ஆயிரம் ரிங்கிட் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.


