ஷா ஆலம், மார்ச் 5 - பள்ளி வளாகத்தில் மின் புகைப்பழக்கத்தில்
தொடர்ந்து ஈடுபடும் மாணவர்களை 14 நாட்களுக்கு இடைநீக்கம் செய்வது
அல்லது முழுமையாக பள்ளியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட
நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொள்ளவிருக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு 17ஆம் எண் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி
பள்ளிகளில் மின் புகைப்பழக்கத்தை முற்றாகத் தடுத்து நிறுத்தும்
முயற்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கல்வியமைச்சர்
ஃபாட்லினா சீடேக் கூறினார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு,
கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு பெற்றோர்கள் அழைக்கப்பட்டு, உறுதி
மொழிக் படிவத்தில் பின்னரும் இச்செயலைத் தொடரும் பட்சத்தில்
மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த பழக்கத்தை மாணவர்கள் தொடரும் பட்சத்தில் அவர்கள் தேர்வு
நடைபெறாத நாட்களில் பள்ளியிலிருந்து இடைநீக்ம் செய்யப்படுவர்.
இதனை அடுத்த அவர்களை பள்ளியிலிருந்து நீக்குவது இறுதி
நடவடிக்கையாக அமையும் என்றார் அவர்.
மின் புகைப்பழக்கத்தைக் கொண்டிருப்பதை நாங்கள் கடுமையானக்
குற்றமாக க் கருதுகிறோம் என்று மேலவையில் இன்று செனட்டர் டத்தோ
டாக்டர் அஸார் அகமது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர்
இவ்வாறு சொன்னார்.
இந்த பழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தடுப்பு கல்வி நடவடிக்கைகள்
ஆக்ககரமான பலனைத் தருவதாகக் கூறிய அவர், பாடம், புறப்பாடம்
மற்றும் ஆளுமை மேம்பாட்டு நடவடிக்கைகள் வாயிலாக இத்திட்டம்
அமல்படுத்தப்படும் என்றார்.
மாணவர்கள் மின் புகைப்பழக்கத்திலிருந்து விலகியிருப்பதற்கான
விழிப்புணர்வு மற்றும் புரிதலை ஏற்படுத்துவது அனைத்து திட்டங்கள்
மற்றும் நடவடிக்கைகளில் பிரதான இலக்காக அமையும் என்றார் அவர்.


