ஷா ஆலம், மார்ச் 5 - இந்து சமய விழாவைக் கேலி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று புக்கிட் அமானுக்கு வரவழைக்கப்பட்ட ஆறு பேரில் ஏரா எஃப்.எம். வானொலி தொகுப்பாளர்கள் மூவரும் அடங்குவர் என்று பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் நாடு முழுவதும் 44 புகார்கள் பெறப்பட்ட நிலையில் அவர்கள் இன்று காலை 11.00 மணியளவில் புக்கிட் அமான் காவல் தலைமையகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் தெரிவித்தார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 298வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் வைரலான இந்து சமயத்தை இழிவுபடுத்தும் ஒரு காணொளி பதிவு தொடர்பாக விசாரணை அறிக்கையை காவல்துறை திறந்துள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த காணொளி பதிவு தொடர்பில் 3 பாகி எரா வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்களான நபில் அகமது, ஆசாட் ஜாஸ்மின் மற்றும் ராடின் ஆகியோர் இந்து காவடி நடனத்தை கேலி செய்யும் தங்களின் செயலுக்காக மன்னிப்பு கோரினர்.


