கோல திரங்கானு, மார்ச் 5 - சமூக ஊடகங்களில் வெளியான விளம்பரத்தை
நம்பி கிரிப்டோ கரன்சி தொடர்பான முதலீட்டில் ஈடுபட்ட பெண் மருத்துவ
அதிகாரி ஒருவர் தனது சேமிப்புத் தொகையான 86,200 வெள்ளியை
இழந்தார்.
அதிக வருமானத்தை வழங்குவதாகக் கூறும் அந்த விளம்பரத்தால்
ஈர்க்கப்பட்ட 39 வயதுடைய அந்த மருத்துவர் அந்த முதலீட்டுக் கும்பலின்
புலனக் குழுவில் இணைந்து தனது விபரங்களை பகிர்ந்து கொண்டதாகக்
கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது
நோர் கூறினார்.
அந்த முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் சந்தேக நபர்கள்
வழங்கிய ஐந்து வங்கிக் கணக்குகளில் தனது சேமிப்புத் தொகையான
86,200 வெள்ளியை அவர் சேர்த்துள்ளார்.
எனினும், அந்த முதலீட்டின் மூலம் தனக்கு கிடைத்த லாபத் தொகையை
அந்த மருத்துவர் மீட்க முயன்ற போது கணக்கு முடக்கப்பட்டு விட்டது
என்பது உள்பட பல்வேறு காரணங்களைக் கூறி அந்த முயற்சி
தடுக்கப்பட்டது என அவர் சொன்னார்.
மேலும், வருமானத்திற்கான ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக 35,156.60
அமெரிக்க டாலரை கிரிப்டோ தீதர் நாணயமாக மாற்றும்படி
உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை அந்த மருத்துவர்
உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவர் நேற்று மாலை 4.16
மணியளவில் கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்
புகார் செய்துள்ளதாகவும் இதன் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின்
380வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அஸ்லி
கூறினார்.


