கோலாலம்பூர், மார்ச் 5 - சமூக ஊடகங்களில் மதத்தை கேலி செய்யும் அல்லது அவமதிக்கும் உள்ளடக்கத்தை பதிவுசெய்தால் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் செயல்பட தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் இந்து மதத்தைக் கேலி செய்யும் வகையில் உள்நாட்டு வானொலி நிறுவனத்தின் செயல் குறித்து கருத்துரைக்கையில், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் அதனைத் தெரிவித்தார்.
இத்தகைய இழிவான செயல்கள் நாட்டின் தேசியக் கோட்பாடுகளின் கொள்கைகளுக்கு முரணாக உள்ளதாகவும் அவர் சாடினார்.
ஆகவே, மலேசியாவில் உள்ள மதங்களையும் கலாச்சார உணர்வுகளையும் மலேசியர்கள் மதிக்க வேண்டும் என்று டத்தோ ஏரன் அகோ டாகாங் கேட்டுக் கொண்டார்.
பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருப்பதால் மதம் அல்லது இனப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும் உணர்வை பின்பற்ற வேண்டும் என்று ஏரன் வலியுறுத்தினார்.
இத்தகைய செயல்களின் மூலம், மத நம்பிக்கையாளர்களிடையே பதற்றம் அல்லது வெறுப்புணர்வை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் அனைத்து தரப்பினருக்கும் நினைவுறுத்தினார்.


