புத்ராஜெயா, மார்ச்-5 – தைப்பூசக் காவடியாட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் முன்னணி வானொலி நிலையம் பதிவேற்றிய வீடியோ மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து விடும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் ஆகிய தரப்புகளை நிந்திக்கும் செயல்கள் தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமாய் முடியும் என டத்தோ ஸ்ரீ அன்வார் நினைவுறுத்தினார்.
பிரதமர் அலுவலகத்தின் நேற்றைய முகநூல் நேரலையில், அவரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா அதனைக் குறிப்பிட்டார்.
பேச்சிலோ, செயலிலோ 3R அம்சங்களைத் தொடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். பல்லின மதங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதையும் அன்பும் மேலோங்க வேண்டும் என்றார் அவர்.
ஒற்றுமைக்கான அடிப்படையாக, ருக்குன் நெகாரா தேசியக் கோட்பாடுகளை மலேசியர்கள் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாக துங்கு நஷ்ருல் கூறினார்.
ஆஸ்ட்ரோ கீழ் இயங்கும் ஏரா எஃ.எம் மலாய் வானொலியின் அறிவிப்பாளர்கள் சிரித்துக்கொண்டும் நடனமாடியும் ‘வேல் வேல்’ என்ற சுலோகத்தை உச்சரிக்கும் வீடியோ அதன் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்துக்களின் மனம் புண்படும்படியான அச்செயலுக்கு அறிவிப்பாளர்களும் ஆஸ்ட்ரோ ஆடியோ நிறுவனமும் பகிரங்க மன்னிப்புக் கோரின.
மேலும், `Pagi di Era``` காலை நிகழ்ச்சியை நடத்தும் அந்த 3 அறிவிப்பாளர்கள் பணியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த செயலுக்கு மன்னிப்பு போதாது, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற கோரிக்கை, சமுதாயத் தலைவர்கள் முதற்கொண்டு மக்கள் வரை எதிரொலிக்கிறது.


