ஷா ஆலம், மார்ச் 5 - வணிகர்கள் உணவுத் தயாரிப்பு விதிமுறைகளை
முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய மாநிலத்திலுள்ள 200 ரமலான்
சந்தைகளில் சிலாங்கூர் சுகாதார இலாகா அதிகாரிகள் சோதனையில்
ஈடுபடுவர்.
உணவு நச்சுத்தன்மை பாதிப்புகள் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கு
ஏதுவாக 200க்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் உணவு வளாகங்களில்
சோதனையில் ஈடுபடுவர் என்று மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் உம்மி
கல்தோம் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள 236 ரமலான் சந்தைகளில் 15,349 கடைகள்
திறக்கப்பட்டுள்ளன. காஜாங்கில் மிக அதிகமாக அதாவது 41 ரமலான்
சந்தைகள் செயல்படுத்தப்பட்டுள்ள வேளையில் இங்கு 2,742 கடைகள்
வணிக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
எங்களிடம் உள்ள 200க்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் அச்சந்தைகளில் விரிவான சோதனையை மேற்கொள்வர் என்று இங்குள்ள செக்சன் 13 ரமலான் சந்தைக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி உணவு பாதுகாப்பு
பிரசாரத்திற்கான கியுஆர். குறியீட்டை அறிமுகம் செய்தார்.
உணவு விற்பனையில் காணப்படும் தவறுகளை பொது மக்கள்
சுட்டிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பு மாநிலத்தில்
முதன் முறையாக அமல்படுத்தப்படுகிறது என உம்மி கல்தோம்
சொன்னார்.
இந்த கியுஆர். குறியீடு உணவு வகைகளைத் தேர்தெடுப்பதற்கான
வழிமுறைகள், நச்சுணவை தவிர்ப்பதற்கான வழிகள் மற்றும் மீந்து போன உணவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றும் முறை உள்பட பல்வேறு தகவல்களையும் வழங்குகிறது என்றார் அவர்.
மாநிலம் முழுவதும் உள்ள ரமலான் சந்தைகளுக்கு வரும் பொது மக்கள்
இந்த கியுஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தங்களுக்கு
வேண்டியத் தகவல்களைப் பெறலாம் என்று அவர் கூறினார்.


