கோலாலம்பூர், மார்ச் 5- இங்குள்ள ஜாலான் பகாங்கில் கடந்த
வெள்ளிக்கிழமை தாதி ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் மனநலம்
பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீசார் கைது
செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.10 மணிக்கு
நிகழ்ந்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி
அப்பாண்டி சுலைமான் கூறினார்.
அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றி வரும் அந்த தாதி பஸ்
நிறுத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அச்சந்தேகப் பேர்வழி
கனமான பொருளால் அவரின் தலையின் பின்புறம் தாக்கி விட்டு
தப்பியோடியதாக அவர் தெரிவித்தார்.
உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த
தாதிக்கு தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டன என்று நேற்றிரவு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட
போலீசார் அந்த சந்தேகப் பேர்வழியை நேற்றிரவு 10.11 மணியளவில்
சம்பவ இடத்திற்கு அருகில் கைது செய்தனர். ஆயுதத்தால்
வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியது தொடர்பில் குற்றவியல்
சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது என அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது
தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் எந்த
அடையாள ஆவணமும் காணப்படவில்லை என்பதோடு தன்னைப் பற்றிய
விபரங்களையும் அவரால் கொடுக்க இயலவில்லை என சுலிஸ்மி
குறிப்பிட்டார்.
அந்த ஆடவரிடம் இருந்து காகிதம் வெட்டும் கத்தி பறிமுதல்
செய்யப்பட்டதாகக் கூறிய அவர், மருத்துவச் சோதனைக்காக
கோலாலம்பூர் மருத்துவமனையின் மனநல சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.


