இஸ்தான்புல், மார்ச் 5 - கெய்ரோவில் கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற அவசர அரபு உச்சநிலை மாநாடு காஸா பிரதேசத்தை மீண்டும் நிர்மாணிப்பு செய்வதற்கான மறுகட்டமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.
பாலஸ்தீன அரசு மற்றும் அரபு நாடுகளின் முழு ஒருங்கிணைப்புடன் எகிப்து சமர்ப்பித்த இந்த திட்டம், காஸாவை ஒரு விரிவான அரபு திட்டமாக விரைவாக மீட்டெடுப்பது மற்றும் மறுகட்டமைப்பு செய்வது குறித்து உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை நடத்திய ஆய்வின் அடிப்படையில் அமைந்தது என்று உச்சநிலை மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த காரணத்தைக் கொண்டும் அல்லது எந்த சூழ்நிலையிலும் பாலஸ்தீனர்களை அவர்களின் நிலத்திலிருந்து இடம்பெயரச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிப்பதாகவும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.
பாலஸ்தீனர்களின் இடம்பெயர்வை இனப்படுகொலை குற்றத்தின் ஒரு பகுதியாக வகைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஒரு அரபு சட்டக் குழு பணிக்கப்பட்டுள்ளதாக அரபு உச்சநிலை மாநாடு அறிவித்தது.
அதே சமயம், காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகள் நுழைவதை நிறுத்துவதற்கும் உதவிப் பணிக்கு பயன்படுத்தப்படும் பாதையை மூடுவதற்கும் இஸ்ரேல் எடுத்த சமீபத்திய முடிவை அந்த அறிக்கை கண்டித்தது. இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும் என்று வலியுறுத்தியது.


