கோலாலம்பூர், மார்ச் 5 - குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு முன்னதாகவே ஊழியர் சேம நிதி வாரியப் (KWSP) பங்களிப்பாளர்கள் தங்களது சேமிப்பை பயன்படுத்தும் நடவடிக்கை ஓய்வுப் பெறும் காலத்தில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
முதுமை காலத்திற்கு KWSP-இன் சேமிப்பு அவசியம் என்பதனால், தாம் நிதியமைச்சராக பதவி வகித்த காலத்திலிருந்தே அப்பணத்தை மீட்டுக் கொள்ள தளர்வு வழங்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"பெரும்பாலான பங்களிப்பாளர்கள் குறிப்பாக, மலாய் சமுதாயத்தினர் மிகச் சிறிய அளவிலான சேமிப்புகளைக் கொண்டுள்ளதாக ஊழியர் சேம நிதி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு வழங்குவதால், ஓய்வு பெறும் போது சிக்கலை ஏற்படுத்தும்,'' என்று பிரதமர் தெரிவித்தார்.
மக்களவையில், வேலை இழந்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக KWSP சேமிப்பை பயன்படுத்திக் கொள்ளும் பரிந்துரை குறித்து பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் அமின் ஹமிட் எழுப்பிய கேள்விக்கு அன்வார் இப்ராஹிம் இவ்வாறு பதிலளித்தார்.
எனினும், தற்போது உள்ள KWSP-இன் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டாலும் அவசர தேவைகளை KWSP பரிசீலிக்க முடியும் என்று நிதி அமைச்சருமான அன்வார் கூறினார்.


