ஷா ஆலம், மார்ச் 5- கோம்பாக் ஒருங்கிணைந்த பஸ் முனையம்
(டி.பி.ஜே.) வரும் மார்ச் 15ஆம் தேதி தொடங்கி கட்டங் கட்டமாகச்
செயல்படத் தொடங்கும் என்று போக்குவரத்து அந்தோணி லோக்
கூறினார்.
இந்த பஸ் முனையம் திறக்கப்பட்ட முதல் வாரத்தில கிழக்குக் கரை
மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் இங்கு இறக்கி விடப்படுவார்கள்
என்று அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
நோன்பு பெருநாள் காலமே எங்களின் எதிர்பார்ப்பாகவும் இலக்காகவும்
உள்ளது. சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் இந்த பஸ்
முனையத்தைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் டி.பி.எஸ். எனப்படும்
தெற்கு ஒருங்கிணைந்த முனையத்தில் நிலவும் நெரிசலைக் குறைக்க
இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பேருந்து முனையத்தில் அமைந்துள்ள மண்டபத்தையும் பொது
மக்கள் வாடகைக்குப் பெற முடியும் என இந்த முனையத்திற்கு நேற்று
மேற்கொண்ட பணி நிமித்த வருகையின் போது செய்தியாளர்களிடம்
அவர் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து
வினவப்பட்ட போது, அத்தரப்பினரின் நடமாட்டத்தை எளிதாக்கும்
வகையில் பிரத்தியேக பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த பஸ் முனையத்தில் சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது, தாங்கள்
மாற்றுத் திறனாளி என்பதை சம்பந்தப்பட்ட பயணி முன்கூட்டியே
தெரிவிக்க வேண்டும். அந்த சிறப்பு அம்சத்தின் வாயிலாக மாற்றுத்
திறனாளி பற்றிய தகவல் பேருந்து ஓட்டுநருக்குத் தெரிவிக்கப்படும்.
ஓட்டுநரும் பேருந்தை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்தியேகத்
தடத்தில் நிறுத்துவார் என அவர் சொன்னார்.
இந்த பஸ் முனையம் எதிர்காலத்தில் பேருந்து, எல்ஆர்டி, கிழக்கு கரை
இரயில் (இ.சி.ஆர்.எல்.) ஆகிய போக்குவரத்து திட்டங்களுக்கான பிரதான
மையமாக விளங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


