கோலாலம்பூர், மார்ச் 5 - உலு சிலாங்கூர், லெம்பா பெரிங்கின் டோல் சாவடியின் வெளியேறும் பகுதியில் போலீசார் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பகுதியில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் ஐம்பத்திரண்டு வயதான சந்தேக நபரை அதிகாலை 4.40 மணியளவில் கைது செய்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஃபைசால் தாஹ்ரிம் தெரிவித்தார்.
சந்தேக நபர் பயணித்த வாகனத்தில் 13,220 வெள்ளி மதிப்புள்ள 682 கிராம் ஹெரோயின், ஷாபு மற்றும் எரமின் 5 ஆகிய போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபர் மீது நான்கு போதைப்பொருள் வழக்குகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் மெத்தம்பெத்தமைன் மற்றும் மார்பின் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39பி மற்றும் 15(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117 வது பிரிவின் கீழ் சந்தேக நபர் மார்ச் 7 வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.


