கோலாலம்பூர், மார்ச் 5 - ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நலக் காரணங்களால் அந்நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயிலின் உடல்நிலை சரியில்லை என்பதோடு அவருக்கு மருத்துவ விடுப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது என்று வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
இதன் தொடர்பில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி ) காலை 10.00 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இன்று நடைபெறவிருந்த இஸ்மாயிலிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டு வேறொரு நாளில் நடைபெறும் செய்யப்படும் என்பதை எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தனது சொத்து குறித்த தகவல்களைச் சமர்ப்பித்த இஸ்மாயில், பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குமூலம் வழங்கினார்.
எம்.ஏ.சி.சி. நடத்திய ஒரு சோதனை நடவடிக்கையில் 17 கோடி வெள்ளி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊழல் மற்றும் பணமோசடி விசாரணைக்கு உதவ அந்த முன்னாள் பிரதமரின் வாக்குமூலம் தேவைப்படுகிறது என்று அஸாம் நேற்று கூறியிருந்தார்.
பிரதமர் பொறுப்பேற்று நாட்டை வழிநடத்திய போது, விளம்பர மற்றும் ஊக்குவிப்பு நோக்கங்களுக்காக செய்யப்பட்ட நிதி செலவினம் மற்றும் கொள்முதல் மீது இந்த விசாரணையில் கவனம் செலுத்தப்படுகிறது.
இதுவரை 31 நபர்களிடம் எம்.ஏ.சி.சி. வாக்குமூலம் பதிவு செய்துள்ளதோடு 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 13 வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது.


