அம்பாங் ஜெயா, மார்ச் 5 - கெஅடிலான் ராக்யாட் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி பதவிக்கு போட்டியிடுவது குறித்து கட்சியின் மத்திய தலைமைத்துவக் மன்ற உறுப்பினர் (எம்பிபி) ரோட்சியா இஸ்மாயில் ஆலோசித்து வருகிறார்.
மகளிர் பிரிவுக்கு தலைமையேற்று வழிநடத்த அடிமட்ட உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைகள் வருவதை ஒப்புக்கொண்ட அம்பாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இதன் தொடர்பில் விரைவில் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்றார்.
கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் பலர் கடந்தாண்டு இறுதியிலிருந்து
என்னை அணுகி மகளிர் பிரிவை வழிநடத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பிரிவில் சரி செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் இருப்பதை நான் உணர்ந்துள்ளேன்.
ஆகவே, உடனடியாக புத்துணர்வு அளிக்க வேண்டிய அளவுக்கு மகளிர் பிரிவில் தற்போது ஒருவித அயர்வு நிலை இருப்பதை நான் காண்கிறேன் என்று நேற்றிரவு அம்பாங்கில் நடைபெற்ற ஆதரவற்ற மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
மகளிர் பிரிவுக்கு போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்கள் முக்கிய கவனம் என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, கட்சியின் பிரிவுகளைப் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துவேன் என்று ரோட்சியா பதிலளித்தார்.
நாட்டின் அரசியல் தலைமையை ஏற்பதற்கான தகுதியை வயது ரீதியில் மட்டுமல்லாமல் திறமை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் அளவிடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, ஷா ஆலம் தொகுதி தலைவர் பதவியை தாம் தற்காக்கவிருக்கும் தகவலையும் ரோட்சியா உறுதிப்படுத்தினார்.
கெஅடிலான் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் 20 வரை நடைபெறவுள்ளன. அதே நேரத்தில் மத்திய தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் மே 24ஆம் தேதி நடைபெறும்.


